லக்னோ, மே.22-
உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் திடீர் வானிலை மாற்றம் பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மரங்கள் வேரோடு சாய்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில், பல மரங்கள் வேரோடு சாய்ந்து வாகனங்கள் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை மற்றும் புயல் காரணமாக 34 பேர் உயிரிழந்தனர். புயல், மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிவாரணப் பணிகளை முழு வேகத்தில் மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மின்னல், புயல் அல்லது மழை தொடர்பான பேரிடர்களால் மனிதர்கள் அல்லது விலங்குகள் உயிரிழந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.