ஜோகூர் பாரு, மே.22-
பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில் முக்கியப் பதவிகளுக்கு போட்டியிடும் தனது ஆதரவு வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை பகிரங்கமாக அறிவித்து இருப்பது மூலம் தேர்தல் விதிமுறைகளை கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி மீறியிருப்பதாக தேர்தல் குழு இன்று அறிவித்துள்ளது.
பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடைமுறையையும், தேர்தல் விதிமுறைகளையும் மீறியிருக்கும் ரஃபிஸி ரம்லிக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்படும் என்று தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா அறிவித்துள்ளார்.
தனக்கு வேண்டிய வேட்பாளர்களை அடையாளப்படுத்தி, பட்டியல் வெளியிடப்படுவதை பிகேஆர் தேர்தல் விதிமுறை தடை செய்கிறது.
இந்நிலையில் கட்சியின் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தாம் போட்டியிடும் அதே வேளையில் உதவித் தலைவர்கள் பதவிக்கு தனக்கு ஆதரவாக யார் யார் போட்டியிடுகின்றனர், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ரஃபிஸி ரம்லி, ஒரு பட்டியலை வெளியிட்டது மூலம் தேர்தல் நடைமுறையை அவர் மீறியுள்ளார் என்று டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.