பிகேஆர் துணைத் தலைவர் தேர்தலில் அன்வாரின் புதல்வி நூருல் இஸா மகத்தான வெற்றி

ஜோகூர் பாரு, மே.23-

மிகப் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அக்கட்சியின் தேசியத் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸா மகத்தான வெற்றி பெற்றார்.

இரவு 9.45 மணி வரையில் தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் கட்சியின் நடப்புத் தலைவர் ரஃபிஸி ரம்லியை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சியின் உதவித் தலைவரான 44 வயது நூருல் இஸா வெற்றி பெற்றதாகத் தேர்தல் குழுவைச் சேர்ந்த முக்கிய அதிகாரி தெரிவித்தார்.

நூருல் இஸாவிற்கு 72 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகேஆர் கட்சியின் புதிய துணைத் தலைவராக நூருல் இஸா தேர்வு செய்யப்பட்டது மூலம், டத்தோஸ்ரீ அன்வாருக்கு அடுத்து பிகேஆர் கட்சிக்குத் தலைமையேற்று, வழிநடத்தப் போவது அவரின் புதல்வியே என்பது கிட்டத்தட்ட உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில் நாட்டின் 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிகேஆர் கட்சி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆகியவற்றுக்கு நூருல் இஸா தலைமையேற்பதற்கு ஏதுவாக அவர் கட்சியின் இரண்டாது முக்கியப் பதவிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே கட்சியின் 4 உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் சாங் லீ காங் மற்றும் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS