டக்கா, மே.24-
வங்காளதேசத்தில் மீண்டும் ஒரு குழப்பம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தின் போது மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டிருந்தது. அவை எல்லாம் இப்போது தான் சரியாகி வரும் நிலையில், மீண்டும் ஒரு குழப்பம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு எதிரானப் போராட்டத்தை தொடர்ந்து வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி அமைந்தது. இடைக்கால அரசு அமைந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், மீண்டும் குழப்பம் வெடித்துள்ளது. பேராசிரியர் முகமது யூனுஸ் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சிகளிடையே பொதுவான நிலையை எட்ட முடியாததால் ஆட்சி நடத்துவதே கடினமாக இருப்பதாகவும் இதனால் அவர் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே யூனுஸின் இடைக்கால அரசுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இராணுவத்திற்கும் யூனுஸ் ஆட்சிக்கும் இடையே கூட கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்தாண்டு மாணவர் போராட்டம் மிகப் பெரியளவில் வெடித்த போது இராணுவத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற இராணுவம் உதவிய போதிலும், மாணவர் போராட்டத்தை எந்த விதத்திலும் தடுக்கவில்லை.
அதன் பிறகும் கூட இராணுவம் ஆட்சியை அமைக்கலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில், ராணுவம் ஆட்சி அதிகாரத்தில் தலையிடவில்லை. யூனுஸ் இடைக்கால ஆட்சியை அமைக்க உதவியது. ஆனால், இப்போது இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி மீண்டும் ஒரு குழப்பம் ஏற்பட்டால் அது வங்காளதேச எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குவதாகவே இருக்கும் என கூறப்படுகின்றது.