பெண் 2.0 திட்டத்திற்கான நிதி 100 மில்லியன் ரிங்கிட்டாக இரட்டிப்பாக்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன் தகவல்

கோலாலம்பூர், ஜூன்.03

இந்தியப் பெண்கள் தங்கள் தொழில்துறையை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவுவதை, நோக்கமாகக் கொண்ட அமானா இக்தியார் மலேசியாவின் பெண் 2.0 திட்டத்திற்கான நிதி, 100 மில்லியன் ரிங்கிட்டாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதியானது, அதிகமான இந்தியப் பெண்கள், தாங்கள் சார்ந்துள்ள தொழில்துறைகளில், பொருளாதார ரீதியில் மேம்பாடு காண வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதாகும் என்று தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

இந்தப் பெண் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதுடன், இந்திய சமூகத்திற்கு குறிப்பாக, சிறு தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள இந்தியப் பெண்களுக்கு உண்மையிலேயே இந்த திட்டம் தேவை என்பதையும் நிரூபித்துள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார். இன்று பண்டார் ஶ்ரீ டாமான்சாராவில் உள்ள அமானா இக்தியார் மலேசியா தலைமையகத்தில் பெண் 2.0 திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட பெண் திட்டம் 6 ஆயிரத்து 247 இந்திய பெண்களுக்குப் பயனளித்துள்ளது. மொத்தம் 42.7 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டது. இதில் 1,062 புதிய தொழில்முனைவோரும் அடங்குவர்.

இந்தியப் பெண் தொழில்முனைவர்கள் அடைந்து வரும் வளர்ச்சியை ரமணன் வெகுவாகப் பாராட்டினார். அவர்களைக் கடின உழைப்பாளிகள் என்றும் மன உறுதிமிக்கவர்கள் என்றும் ரமணன் புகழ்ந்துரைத்தார்.

கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடானது, அமானா இக்தியார் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியப் பெண் தொழில்முனைவோரை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவுத் துறை, தையல் கலை, ஒப்பனை மற்றும் சமூக சேவைகள் போன்ற துறைகளில் சிறிய அளவில் ஈடுபட்டுள்ள இந்தியப் பெண்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்கு பெண் 2.0 பெரும் பங்களிப்பை வழங்கும் என்று ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

பெண் திட்டத்தின் வாயிலாக கடனுதவி பெற்றவர்கள், 20 முதல் 30 விழுக்காடு வரை வருமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ரமணன் கூறினார்.

அதன் 2024 ஆம் ஆண்டு செயல்படாத கடன் விகிதம் வெறும் 0.02 சதவீதம் மட்டுமே. இது நிறுவனத்தின் 38 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவு. இது வெறும் கடன் அல்ல, இது குடும்பங்களை உயர்த்துவதற்கும், வாழ்க்கையை மாற்றுவதற்கும் ஒரு கருவியாகும்.

பெண் திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள இந்தியப் பெண்கள் 3 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரிங்கிட் வரையிலான கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.

திவால் நிலை, CTOS அல்லது CCRIS போன்ற சிக்கல்கள் இருந்தாலும், கடன் தொகை 30 ஆயிரம் ரிங்கிட் வரை வழங்கப்படும். இது அனைத்து இந்தியப் பெண்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது.

இது பின்தங்கியவர்களுக்கு, குறிப்பாக வேறு வழியில்லை என்று திக்கற்றவர்களாக இருப்பவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ரமணன் கூறினார்.

இதனிடைய இந்தப் பெண் திட்டத்தில் பலன் அடைந்து இருக்கும் ரவாங்கைச் சேர்ந்த மலாசாத் தூள் வர்த்தகப் பெண்மணி திருமதி பிரேமா ராஜு விவரிக்கையில், கிளை ஒன்றைத் திறக்கும் அளவிற்கு அமானா இக்தியாரின் பெண் நிதி உதவித் திட்டம், தமக்கு பெரும் உதவியாக இருப்பதாக விவரித்தார்.

இந்தப் பெண் திட்டம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டது என்பதுடன் இந்திய சமுதாயத்தை மேம்படுத்தும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தொலைநோக்குப் பார்வையுடன், இது இணைந்து இருப்பதாக ரமணன் வர்ணித்தார்.

WATCH OUR LATEST NEWS