புதுடெல்லி, ஜூன்.12-
ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவத்தினர் உதவி வருகின்றனர். ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்த மருத்துவ கல்லூரி விடுதி மீதும் விழுந்தது. இதில் மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து நடக்கும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டோருக்கு உதவி செய்ய 130 ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் இடிபாடுகளை அகற்றும் ஜேசிபி குழுவினர், மருத்துவக் குழுவினர், அதிவிரைவு குழுவினர், தீயை அணைக்கும் கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பொறியியல் குழுவினர் உதவி வருகின்றனர். ராணுவ மருத்துவமனையும் தயார் நிலையில் உள்ளது.