குடிநுழைவு ஆவணங்களைப் போலியாகத் தயாரித்த இரு கும்பல்கள் முறியடிப்பு

கோலாலம்பூர், ஜூன்.18-

மலேசியக் குடிநுழைவுத் துறையின் முக்கிய ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து வந்தததாக நம்பப்படும் இரு கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை கோலாலம்பூரிலும், பெட்டாலிங் ஜெயாவிலும் குடிநுழைவுத் துறை நடத்திய இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் உள்ளூரைச் சேர்ந்த ஓர் ஆடவர், இரு பெண்கள் மற்றும் ஒரு பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

முதல் சோதனை கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டதில் அந்த மூவர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது சோதனை, பெட்டாலிங் ஜெயாவிலும், கோலாலம்பூர் மலூரியிலும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.

இந்த மோசடி வேலைகளுக்கு உள்ளூர்வாசிகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் ஒரு பாகிஸ்தான் ஆடவரும் கைது செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.

குடிநுழைவுத் துறை வெளியிடக்கூடிய அடையாள ஆவண வில்லைகளைப் போல 13 போலி வில்லைகள், 6 வங்காளதேச விசாக்கள், இரண்டு இந்திய விசாக்கள் உள்ளிட்ட போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் இந்த இரு சோதனைகளிலும் பறிமுதல் செய்யப்பட்டதாக டத்தோ ஸாகாரியா ஷாபான் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS