சிரம்பான், ஜூன்.28-
சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜாஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, நேற்று ஜுன் 27 ஆம் தேதி தொடங்கி ஜுலை 9 ஆம் தேதி வரை வெகுச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இந்த வருடாந்திர உற்சவ விழா வரும் ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.
இவ்வருடாந்திரத் திருவிழாவின் முதல் நாளான நேற்று வெள்ளிக்கிழமை வேத மந்திரங்கள், தேவார இசை ஒலிக்க மங்கல வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் இனிதே நடைபெற்றதாக ஆலயத்தின் பிரதான குருக்கள் சிவஸ்ரீ புவிதர்ஷன் தெரிவித்தார்.

முன்னதாகப், பூர்வாங்கப் பூஜைகளுடன் மூலவர் மற்றும் கொடி மரத்திற்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து உபயக்காரர் சங்கல்பம், மூலவருக்கு விஷேச அபிஷேகம், மற்றும் மூலவர்கள், பல்லக்கில் சுமந்த வண்ணம் ஆலயப் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தனர்.
கொடி மர அபிஷேகத்திற்குப் பின்னர் வசந்த மண்டபப் பூஜை நடைபெற்றது.
நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய தேவஸ்தானத்தின் மஹோற்சவப் பெருவிழா, 13 நாட்களுக்குக் காலை, மாலை இரு வேளைகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

திருக்கயிலாயப் பரம்பரை ஸ்ரீ சுந்தரப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் தலைமையில் அவரின் ஆலோசனைப்படி மஹோற்சவப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பெருவிழாவில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு இராஜ இராஜஸ்வரர் அருளாசியைப் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.