கோத்தா பாரு, ஜூன்.29-
வரும் ஜூலை 1 முதல், அனைத்து விரைவு பேருந்துகளிலும் சுற்றுலாப் பேருந்துகளிலும், அதன் ஓட்டுநர்கள், பயணிகள் என அனைவரும் சீட் பெல்ட் பாதுகாப்புப் பட்டையை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. 2020 ஜனவரிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு இந்த விதி உடனடியாகப் பொருந்தும்.
இந்த புதிய விதியைக் கடைபிடிக்காதவர்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால், பயணிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.
இந்த விதிகள் தொடர்பாக ஏற்கனவே பேருந்து நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதால், இனி எந்த சமரசத்திற்கும் இடமிருக்காது என அத்துறையின் தலைமை இயக்குநர் ஆடி ஃபட்லி ரம்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆகவே, பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் பாதுகாப்பைப் பெரிதாகக் கருதி, விபத்துக்களைத் தவிர்க்க சீட் பெல்ட் அணிவதை உறுதிச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.