பெசுட், ஜூன்.29-
திரங்கானுவில் உள்ள பூலாவ் பெர்ஹெந்தியான் பகுதியில் நேற்றிரவு படகு கவிழ்ந்த விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், படகு ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்தில் சிக்கிய எவரும் பாதுகாப்பு உடைகளை அணியவில்லை என்று பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸாமுடின் அஹ்மாட் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 20 வயதுடைய மலேசியரான படகு ஓட்டுநருக்கு போதைப்பொருள் தொடர்பான ஐந்து குற்றப்பதிவுகள் உள்ளன.
விபத்தில் 40 வயது எஸ். ஆறுமுகம் அவரது மூன்று வயது மகள் ஆ. சர்விக்காவும், பத்து வயது உறவினர் வி. வெண்பணியும் உயிரிழந்தனர். படகில் இருந்த ஆறு வயது குழந்தை உட்பட, 12 பேரும் பெசுட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.