கோலாலம்பூர், ஜூன்.30-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 265 ஆவது கிலோமீட்டரில் மெனோரா சுரங்கப்பாதைக்கு அருகில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த வெடிகுண்டை அகற்றுவதற்கு ஏதுவாக அதன் வழித்தடம் சிறிது நேரம் மூடப்பட்டது.
வெடிகுண்டை அகற்றுவதற்கு போலீசாருக்கு சுமார் ஒரு மணி நேரம் தேவைப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
இன்று காலையில் அப்பகுதியில் பராமரிப்புப் பணியை மேற்கொண்ட குத்தகைப் பணியாளர் ஒருவர், அந்த பழங்கால வெடிகுண்டைக் கண்டுபிடித்ததாக அவர் குறிப்பிட்டார்.
செடி, கொடிகள் மற்றும் புற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த 51 வயது பணியாளர், அந்த வெடிகுண்டு குறித்து தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு போலீஸ் குழு அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டதாக டத்தோ நோர் ஹிசாம் குறிப்பிட்டார்.
பிளஸ் நிறுவனத்தின் உதவியுடன் கோலகங்சாருக்கும், ஈப்போவிற்கும் இடையிலான வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டு, வெடிகுண்டு செயலிழக்க செய்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு அந்த வழித்தடம் மீண்டும் திறக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.