சிட்னி, ஜூன்.30-
கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா சிட்னியில் நடந்த பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் பங்கு கொண்ட முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸின் மகள், கடமையில் இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாக அந்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கு கொண்டவர்களை அங்கிருந்து கலைந்துச் செல்லும்படி போலீசார் பிறப்பித்த உத்தரவைப் பின்பாற்றாதது, போலீசாருக்கு ஒத்துழைப்பு நல்காதது மற்றும் அவர்களுக்கு இடையூறு விளைவித்தது முதலிய குற்றங்களின் பேரில் தோமி தோமஸின் மகள் ஹான்னா தோமஸ் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என ஏபிசி செய்தி நிறுவனம் கூறுகிறது.
அன்றைய தினம் போலீசார், ஹான்னா தோமஸைக் கைது செய்வதற்கு நடந்த தள்ளுமுள்ளு போராட்டத்தில் 35 வயதான அப்பெண்ணுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஹான்னா தோமஸ் முகத்தில் ஏற்பட்ட காயங்கள் கடுமையானவை என்றும் இதனால், அவர் ஒரு கண் பார்வையை இழக்க நேரிடலாம் என்றும் அவரின் வழக்கறிஞர் பீட்டர் ஓ’பிரையன் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஹான்னா தோமஸ், பேங்க்ஸ்டவுன் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.