புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவப் பேரிடரில் குற்ற அம்சங்கள் இல்லை

ஷா ஆலாம், ஜூன்.30-

கடந்த ஏப்ரல் மாதம் சுபாங் ஜெயாவில் உள்ள வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவப் பேரிடரில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

கவனக்குறைவு அல்லது சதிநாச வேலையினால் இந்தத் தீச் சம்பவம் நிகழ்ந்தது என்பதற்கு எந்தவோர் ஆதாரமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார இலாகா, சுபாங் ஜெயா மாநகர் மன்றம், பெட்ரோனாஸ் உட்பட பல்வேறு தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது என்று டத்தோ ஹுசேன் தெரிவித்தார்.

இந்தப் பேரிடர் குறித்து ஒன்று விடாமல், முழுமையாகப் பல கோணங்களில் ஆராயப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

அப்பகுதியில் உள்ள லாட் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடை நிர்மணிப்புப் பணி, சாக்கடை குழாய்கள் மாற்றப்பட்டது, வெடிச் சம்பவம் அல்லது எரிபொருளினால் தீயிட்டல் உட்பட பல கோணங்களில் ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுபாங் ஜெயா வட்டாரம் உட்பட நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பயங்கரத் தீச் சம்பவம் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கை இன்று வெளியிட்டப்பட்ட போது, டத்தோ ஹுசேன் இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS