ஹிமாச்சலில் மழை, நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலி

சிம்லா, ஜூலை.01-

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் பியாஸ் நதி நிரம்பி வழிகிறது. அதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஆறுகள், ஓடைகள் நிரம்பியதால், அதனையொட்டிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மெக்லி என்ற கிராமத்தில் மழை, வெள்ளத்தில் 8 வீடுகளும், ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன. வீடுகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். தரம்பூர் ஆற்றில் நீர்மட்டம் வழக்கத்தை விட கிட்டத்தட்ட 20 அடி உயரத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள சந்தை மற்றும் பஸ் நிலையம் மூழ்கியது.

மாநிலம் முழுவதும் சண்டிகர்-சிம்லா உள்பட என 129க்கும் அதிகமான சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பருவமழை மற்றும் அது தொடர்பான பாதிப்புகளில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிம்லா-கல்கா பாதை மூடப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாகுபாரியில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இன்னும் சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களில் அதிகன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரம் வரை கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால், மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS