காப்புறுதிப் பணத்தை கோருவதற்கு போலி ஆவணங்கள்: கணவன், மனைவி மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூலை.01-

காப்புறுதிப் பணத்தைக் கோருவதற்கு கண் மருத்துவ நிபுணத்துவ மையம் வழங்கியதைப் போல போலி ஆவணங்களைத் தயாரித்து, காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றியதாக ஓர் இந்தியத் தம்பதியர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

தனியார் நிறுவனம் ஒன்றின் செயலாக்க நிர்வாகியான 42 வயது எம். பிரபாகரன் மற்றும் அவரின் 36 வயது மனைவி B. பரிமளா ஆகியோர் நீதிபதி அஸ்ருல் டாருஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஜனவரி 25 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாளில் கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள முன்னணி காப்புறுதி நிறுவனத்தில் அந்தத் தம்பதியர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 471 பிரிவின் கீழ் கணவனும், மனைவியும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS