கோலாலம்பூர், ஜூலை.01-
நாட்டில் கிக் (GIG) தொழில் துறையைச் சார்ந்துள்ள 1.12 மில்லியன் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா ஒன்றை அரசாங்கம் தாக்கல் செய்யவிருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

கிக் தொழில்துறையில் தளத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் தளமின்றி பணியாற்றி வரும் தொழிலாளர்கள் என இரு பிரிவு தொழிலாளர்களின் நலனையும் இந்த உத்தேசச் சட்ட மசோதா உள்ளடக்கியிருக்கும் என்று டத்தோஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் குறிப்பிட்டார்.
கிக் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக தனியொரு சட்டம் இருப்பது மிக அவசியமாகும். இந்த உத்தேசச் சட்ட மசோதா தொடர்பாக பல்வேறு அமைச்சுகளின் பிரதிநிதிகள், நாடு முழுவதும் உள்ள கிக் தொழில்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோருடன் நடத்தப்பட்ட கலந்துடையாடல் வழி சேகரிக்கப்பட்ட யோசனைகள் இந்த உத்தேசச் சட்ட மசோதாவில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று துணைப்பிரதமர் குறிப்பிட்டார்.