கோல திரங்கானு, ஜூலை.01-
கடந்த சனிக்கிழமை திரெங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியானில் கடல் கொந்தளிப்பில் சிக்கி, படகு கவிழ்ந்த கோர விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்த படகோட்டியின், படகைச் செலுத்துவதற்கான உரிமம் தற்காலிகமாகப் பறிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை முடிவடையும் வரையில் அவரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு பிராந்தியத்திற்கான மலேசிய கடல் இலாகாவின் துணை இயக்குநர் முகமட் ஹலிஸாம் சம்சூரி தெரிவித்தார்.
தவிர அந்தப் பயணிகள் படகின் லைசென்சும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 1952 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் சட்டத்தின் 334 ஆவது பிரிவின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் நடப்பு விதிமீறல்கள் நடந்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படுமானால் அந்த படகோட்டியின் உரிமம் நிரந்தரமாகப் பறிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பயணிகள் படகின் உரிமம், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை செல்லத்தக்கது என்றாலும் இரவு நேரத்தில் செயல்பட்டது, பயணிகளைப் படகில் ஏற்றியது முதலிய விதிமீறல்கள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் படகு விபத்தில் பினாங்கைச் சேர்ந்த 40 வயது எஸ். ஆறுமுகம், அவரது 3 வயது மகள் ஏ. சர்விகா மற்றும் உறவுக்காரச் சிறுமியான 10 வயது வி. வெண்பனி ஆகியோர் உயிரிழந்தனர்.