சிரம்பான், ஜூலை.02-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், உள்ளிருந்து பூட்டப்பட்டுள்ள வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டிலிருந்து கடந்த சில தினங்களாக துர்நாற்றம் வீசுவதாக உணர்ந்து, அண்டை வீட்டுக்காரர்கள் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று சோதனை செய்த போது மூவர் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் சிரம்பான் அருகில் தாமான் புக்கிட் கிரிஸ்டல் வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது. நேற்று மாலை 4.53 மணியளவில் அந்த மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஹத்தா சீ டின் தெரிவித்தார்.
வீட்டிற்குள் இரு வெவ்வேறு அறைகளில் சடலங்கள் அழுகிய நிலையில் கிடந்தது தொடர்பில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 61 வயது முதியவர், அவரின் 59 வயது மனைவி மற்றும் அவர்களின் 30 வயது மதிக்கத்தக்க மகன் என்பது அடையாளம் கூறப்பட்டதாக ஏசிபி முகமட் ஹத்தா குறிப்பிட்டார்.
அந்த மூவரின் உடலிலும் தடயவியல் போலீசார் நடத்தியப் பரிசோதனையில் அந்தத் தம்பதியரின் மகனின் வலது கையில் கத்தியால் கீறப்பட்ட காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவரின் பெற்றோரின் உடல்களில் சந்தேகத்திற்கு இடமாக எந்தவொரு தடயங்களையும் கண்டறிய முடியவில்லை. இச்சம்பவத்தின் போது நான்கு கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. ரத்தக்கறை படிந்திருந்த 4 கத்திகளும் மீட்கப்பட்டன. தவிர மேஜையில் பல வகையான மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சவப் பரிசோதனைக்காக மூவரின் உடல்களும் ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளன. இந்த மூவரின் இறப்பு, திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்திய போதிலும் புலன் விசாரணை தொடர்வதாக ஏசிபி முகமட் ஹத்தா குறிப்பிட்டார்.