பட்டர்வொர்த், ஜூலை.02-
பட்டர்வொர்த், சுங்கை ஞியூர் தேசிய தொடக்கப்பள்ளி முன்புறம் ஃபோல் வீல் டிரைவ் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆடவர் ஒருவர், துப்பாக்கிச் சூட்டிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியச் சம்பவத்தில், இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகப் பேர்வழியை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள காரணங்களும் ஆராயப்பட்டு வருவதாக பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்ற போதிலும் இந்தச் சம்பவம் குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.
நேற்று மாலை 5.40 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ஓர் இந்திய நபர் செலுத்திய வாகனத்தை நோக்கி அடையாளம் தெரியாத சந்தேகப் பேர்வழி நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த வாகனத்தின் மீது ஐந்து துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்தன.
40 வயதுடைய அந்த நபர், தனது மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல வந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் அந்த நபர், மயிரிழையில் உயிர் தப்பினார்.