ஷா ஆலாம், ஜூலை.02-
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு பேரிடருக்கு பெட்ரோனாஸ் நிறுவனமே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கேட்டுக் கொண்டார்.
இந்தப் பேரிடர் தொடர்பில் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இலாகாவான டோஷ் விசாரணை நடத்தி தனது முடிவை அறிவித்துள்ளது. அதற்குத் தாம் நன்றி கூறக் கடமைப்பட்ட போதிலும், இந்தச் சம்பவத்திற்கு எந்த தரப்பினரும் பொறுப்பேற்கவில்லை என்ற முடிவை சம்பந்தப்பட்ட பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று பிரகாஷ் தெரிவித்தார்.
இந்த விபத்தினால் மிகவும் கடினமான தருணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியான பராமரிப்புக் கிடைப்பதை உறுதிச் செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, குழாய் வெடிப்பு நடந்த நாளிலிருந்து இதுவரை அயராது உழைத்த மாநில அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்களின் உழைப்பைத் தாம் ஏற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், புத்ரா ஹைட்ஸில் உள்ள பல குடும்பங்களில் இந்த பேரிடர் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. வீடுகள் சேதமடைந்தன, குடும்பங்கள் இடம் பெயர்ந்தன, வாழ்க்கை சீர்குலைந்தது, மேலும் குடியிருப்பாளர்கள் ஒரு காலத்தில் அனுபவித்த பாதுகாப்பு உணர்வு ஆழமாக அசைக்கப்பட்டுள்ளது என்று பிரகாஷ் சுட்டிக் காட்டினார்.
இதற்குப் பரிகாரம் காணப்பட வேண்டுமானால், எரிவாயு குழாய்களுக்குப் பொறுப்பேற்றுள்ள பெட்ரோனாஸ் நிறுவனமே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அவர்கள் அனுபவித்த துயரம் மற்றும் பொருள் இழப்புகளுக்கு நியாயமான மற்றும் சரியான இழப்பீட்டை பெட்ரோனாஸ் வழங்க வேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாக பிரகாஷ் ஓர் அறிக்கையின் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.