கோலாலம்பூர், ஜூலை.03-
நாட்டின் தலைமை நீதிபதி பதவிலிருந்து துன் தெங்கு மைமூன் துவான் மாட், பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இன்னும் புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படாத பட்சத்தில் அவர் வகித்து வந்த பொறுப்பை இடைக்காலமாக மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட் ஹஷிம் ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஆற்றி வந்த கடமைகளை, மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா இடைக்காலமாகக் கவனித்துக் கொள்வார். 1964 ஆம் ஆண்டு நீதிமன்ற நீதிபதிகள் சட்டம் 9 மற்றும் கூட்டரசு அரசியலமைப்புச்சட்டம் 131 A பிரிவுக்கு நிகராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதிக்கான பொறுப்பை இடைக்காலமாக ஏற்பவர், அதற்கான அதிகாரம் மற்றும் பணித் தன்மையை இயல்பாகவே பெறுவதற்கு அந்தச் சட்டம் வகை செய்வதாக மலேசிய கூட்டரசு நீதிமன்ற தலைமை பதிவதிகாரி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.