சிப்பாங், ஜூலை.03-
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஓர் ஆண் மற்றும் இரு பெண்கள் என 3 சந்தேகப் பேர்வழிகளின் தடுப்புக் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
19 க்கும் 20 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும், இன்று காலை 9 மணிக்கு சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, ஜுலை 4 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.
மாணவி மனிஷாபிரிட் கவுருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்தவரான மாணவி, அவரின் காதலன் மற்றும் மேலும் ஒரு பெண், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளி என்ற நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஜுன் 26 ஆம் தேதி இரவு சைபர்ஜெயாவில் தாம் தங்கியிருந்த ஒரு கொண்டோமினியம் வீட்டில் 20 வயது பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
மாணவி மனிஷாபிரிட் கவுருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த சக மாணவி, தாம் சொந்த ஊருக்குச் செல்வதையொட்டி, வீட்டின் சாவியையும், எஸ்சஸ் கார்ட்டையும் தனது காதலனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதனைப் பயன்படுத்தி, அந்த ஆடவன், வீட்டிற்குள் நுழைந்து, இந்தபி பாதகத்தைப் புரிந்து இருப்பதாக இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்து இருந்தார்.
பிடிபட்ட மூன்று சந்தேகப் பேர்வழிகளும் ஜோகூர் பாரு மற்றும் நெகிரி செம்பிலான் கெமஞ்சேவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.