வயது குறைந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: முன்னாள் சைக்கிளோட்ட தேசிய வீரர் மீது குற்றச்சாட்டு

அம்பாங், ஜூலை.03-

வயது குறைந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து ஆபாசச் சேட்டைப் புரிந்ததாக நாட்டின் முன்னாள் தேசிய சைக்கிளோட்ட வீரர் நோர் எஃப்பெண்டி ரொஸ்லி அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

1998 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் சைக்கிளோட்டப் போட்டியில் மலேசியாவிற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தவரான நோர் எஃப்பெண்டி ரொஸ்லி, நீதிபதி நோர்ஷீலா கமாருடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

58 வயதான நோர் எஃப்பெண்டி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுன் 15 ஆம் தேதி மாலை 6 மணியளவில் அம்பாங், தாமான் டேசா கெராமாட், சைக்கிளோட்டப் பயிற்சி மையத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

பயிற்சி என்ற போர்வையில் இளம் சைக்கிளோட்டப் பெண் ஒருவரின் கால்களைப் பிடித்து விடுவதைப் போல் அவரின் மார்பகம் உட்பட உடலில் இதரப் பகுதிகளில் கை வைத்து ஆபாசச் சேட்டைப் புரிந்ததாக அந்த முன்னாள் தேசிய வீரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS