சயாமிய இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்து வரலாறு படைத்தது கோலாலம்பூர் துங்கு அஸிஸா மருத்துவமனை

கோலாலம்பூர், ஜூலை.03-

கோலாலம்பூர் துங்கு அஸிஸா மருத்துவமனை, கடந்த ஜூன் 24 ஆம் தேதி இரட்டை ஆண் குழந்தைகளை அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, வரலாறு படைத்துள்ளது.

ஒட்டிப் பிறந்து மூன்று மாதங்களே ஆன, அந்த இரட்டையர் சயாமிய குழந்தைகளின் வயிறு மற்றும் இடுப்புப் பகுதி ஒன்றாக இணைக்கப்பட்டு, 4 கால்கள் ஒன்றிணைந்து இருந்தன. இவ்வகை ஒட்டிப் பிறக்கு குழந்தைகள் மிக அபூர்வமாகும்.

இவ்விரு குழந்தைகளையும் தனித் தனியாகப் பிரிக்கும் அறுவை சிகிச்சை காலை 8.30 மணிக்கு தொடங்கி இரவு 9.48 மணிக்கு வெற்றிகரமாக நிறைவுப் பெற்றது. மாலை 5.43 மணிக்கு அவ்விரு குழந்தைகளும் முழுமையாகப் பிரிக்கப்பட்டன.

இறைவனின் அருளில் அறுவை சிகிச்சை சுமூகமாக நடைபெற்றது. அந்த இரண்டு குழந்தைகளின் உடல் நிலையும் சீராக உள்ளது. தற்போது மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில், அக்குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன என்று சுகாதார அமைச்சு, தனது முகநூலில் தெரிவித்துள்ளது.

இந்த அறுவை சிகிச்சைக்கு டாக்டர் முகமட் யுசோஃப் அப்துல்லா, டத்தோ டாக்டர் ஸாகாரியா ஸஹாரி, டாக்டர் இந்தான் ஸாரினா ஃபாகிர் முகமட் மற்றும் டாக்டர் பாங் யீ யுன் ஆகிய 4 முன்னணி மருத்துவ நிபுணர்கள் தலைமையேற்றனர். அவர்களுக்கு உதவியாக எச்டிஏ எனப்படும் துங்கு அஸிஸா மருத்துவமனை மற்றும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை ஆகியவற்றின் குழந்தை அறுவை சிகிச்சை மருத்துவக் குழுவினர் உதவினர்.

2019 ஆம் ஆண்டு முதல் துங்கு அஸிஸா மருத்துவமனை, அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாகப் பிரித்தெடுத்த இரட்டையர் குழந்தைகளில் இது நான்காவது சம்பவமாகும். துங்கு அஸிஸா மருத்துவமனை மற்றும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை வரலாற்றில் இது 19ஆவது சம்பவமாகும்.

இது அசாதாரணமான முயற்சியாகும். இந்த வெற்றிக்குப் பாடுபட்ட மருத்துவர் குழுவினருக்கு சுகாதார அமைச்சு பாராட்டுக்களையும், அதே வேளையில் பிரிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டது.

WATCH OUR LATEST NEWS