சிரம்பான், ஜூலை.05-
விரைவு பேருந்து ஒன்று, சாலை உயர வரம்புத் தடையை மோதி, விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் நீலாய், ஜாலான் அராப் மலேசியன் சாலையில் நிகழ்ந்தது.
குறிப்பிட்ட உயரத்திற்கு அதிகமான வாகனங்கள், அந்த சாலையைப் பயன்படுத்த வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அந்த பேருந்து அந்தச் சாலையைப் பயன்படுத்தியதால், உயர வரம்புத் தடையை மோதி, பேருந்து முன்புற கட்டுமானம் சரிந்தது.
இதில் 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் காயங்களுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.
19 பயணிகளுடன் அந்த பேருந்து சிலாங்கூர், காஜாங்கிலிருந்து மலாக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்தது. காயமுற்றவர்கள் அனைவரும் செர்டாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மீட்பு நடவடிக்கையில் ஒன்பது வீரர்கள் ஈடுபட்டதாக நீலாய் தீயணைப்பு நிலையத்தின் செயலாக்கக் கமாண்டர் அஸ்மி ஹாமிட் தெரிவித்தார்.