மலாக்கா, ஜூலை.05-
நீதித்துறையில் பரந்த அனுபவமும், ஆற்றலும் கொண்ட முன்னாள் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட்டின் பதவிக் காலத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பதில்லை என்று அரசாங்கம் எடுத்துள்ள முடிவானது, நாட்டின் நீதித்துறையின் எதிர்காலத்தைப் பற்றி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொருட்படுத்தவில்லை என்பதையே இது சித்தரிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் குற்றஞ்சாட்டினார்.
நீதி பரிபாலனத்தில் முன்னோடி நீதிபதியாக விளங்கிய மைமூன் துவான் மாட்டின் பதவிக் காலத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும், அதனை நீட்டிக்க அரசாங்கம் மறுத்து இருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ஹம்ஸா ஸைனுடின் குறிப்பிட்டார்.
தாம் உட்பட நாட்டு மக்கள் பலர், அந்த முதலாவது பெண் தலைமை நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அந்த கோரிக்கையை ஏற்க அரசாங்கம் மறுத்து விட்டது.
தலைமை நீதிபதியாக பணியாற்றியவர், அரசாங்கத்திற்கு முக்கிய நபராகத் தெரியாமல் போனது ஏன் என்று அவர் வினவினார்.
இது குறித்து பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தில் சிறப்பு பிரேரணையைத் தாம் கொண்டு வரப் போவதாக லாருட் எம்.பி.யான ஹம்ஸா ஜைனுடின் தெரிவித்தார்.