ஜோகூர் பாரு, ஜூலை.05-
துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஜோகூர் பாரு, சுல்தானா அமீனா மருத்துமனையில் ஆடவர் ஒருவரின் சடலம் கைவிடப்பட்டுள்ளது.
அந்த ஆடவரின் சடலம், ஜோகூர், கெலாங் பாத்தாவில் ஒரு எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்த கொள்ளை முயற்சியின் போது நடந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையது என்று சந்தேகிக்கப்படுவதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
எந்தவோர் அடையாள ஆவணமின்றி அந்த ஆடவரின் சடலம் நேற்று அதிகாலையில் சுல்தானா அமீனா மருத்துவமனையில் கைவிடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் சிசிடிவி கேமராவின் பதிவைச் சோதனைச் செய்ததில் கறுப்பு நிற காரில் இரு ஆடவர்கள் அந்தச் சடலத்தை இறக்கி விட்டுச் சென்றுள்ளனர் என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.
அந்த ஆடவரின் விரல் ரேகைப் பதிவை ஆராய்ந்த போது, 42 வயதுடைய அந்த நபர், சுங்கை பட்டாணியைச் சேர்ந்தவர் ஆவார். அவருக்கு ஏற்கனவே 4 குற்றப்பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரின் நெஞ்சிலும், வயிற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன என்று டத்தோ குமார் விளக்கினார்.
முன்னதாக அன்றைய தினம் பின்னிரவு 12.12 மணியளவில் கெலாங் பாத்தாவில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் கொள்ளை முயற்சி தொடர்பில் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாராங்கை ஏந்தியக் கும்பல், துப்பாக்கி வைத்திருந்த கும்பலுடன் மோதியதில் சம்பந்தப்பட்ட நபருக்குத் துப்பாக்கிச் சூடு பாய்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதன் தொடர்பில் ஓர் இந்தியப் பிரஜை உட்பட மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த மூவரும் கோலாலம்பூர், டாங் வாங்கி பகுதியில் பிடிபட்டனர்.
இவர்களில் ஒருவர், தனிநபர் ஒருவருக்கு மெய்க்காவலராக வேலை செய்து வருகிறார். அவரிடம் இருந்த Glock 19 ரக கைத்துப்பாக்கி, துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸ் புத்தகம், 9mm ரகத்திலான 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டத்தோ குமார் தெரிவித்தார்.
விசாரணைக்கு ஏதுவாக இந்த மூன்று நபர்களும் வரும் ஜுலை 10 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்குப் போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.