கோலாலம்பூர், ஜூலை.05-
பல்கலைக்கழகங்கள் உட்பட உயர்க்கல்விகூட மாணவர்களுக்கு எச்ஐவி சோதனைக் கட்டாயமாக்கப்படுவது குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு மேற்கொள்ளலாம். ஆனால், இவ்விவகாரம் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்று மலேசிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜமாலுடின் அப்துல் ரஹ்மான் பரிந்துரை செய்துள்ளார்.
உயர்க்கல்விகூட மாணவர்களுக்கு எச்ஐவி சோதனை நடத்தப்படுவது மூலம், அத்தகையக் கொடிய நோய் பாதிப்பில் உள்ள மாணவர்களுக்குக் கருணையுடன் உரிய சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் உயர்க்கல்விக்கூட மாணவர்கள் மத்தியில் நிலவி வரும் ஆபத்து நிறைந்த தவறான நடத்தையைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்பதையும் அவர் விளக்கினார்.
படிக்கும் காலத்தில் தவறானச் சேர்க்கை, தகாத உறவு, போதைப்பொருள் பழக்கம், ஊசிகளைப் பரிமாறிக் கொள்வது முதலியவற்றினால் உயர்க்கல்விகூட மாணவர்களில் சிலர் எச்ஐவி நோய்க்கு ஆளாகியிருப்பதாக அண்மையில் சுதாதார அமைச்சு வெளியிட்ட திடுக்கிடும் தகவலைத் தொடர்ந்து டாக்டர் ஜமாலுடின் கருத்துரைத்தார்.