புக்கிட் ஜாலில், ஜூலை.05-
தேசிய ஒற்றையர் பிரிவு பூப்பந்து வீரர் லீ ஸி ஜியாவுக்குத் தேவைப்பட்டால் உதவிகளை வழங்கத் தயார் என தேசிய விளையாட்டு மன்றம் கூறியிருக்கிறது. ஸி ஜியா அண்மையில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் மன அழுத்தம் தொடர்பான வரைபடங்களைப் பதிவிட்டிருந்தார். அதனை அடுத்து அவரின் மனநலம் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.
எனினும் அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என எம்எஸ்என் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். ஸி ஜியா ஒரு வேளை அப்படங்கள் மீது ஆர்வம் கொண்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். அதனை ஸி ஜியாவின் நிர்வாகக் குழுவினர் தெரியப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இந்நிலையில் ஸி ஜியாவுக்கு உதவித் தேவைப்படுமாயின் அதற்கு எப்போதுமே தாங்கள் தயார் என ஜெஃப்ரி ஙாடிரின் கூறினார்.
ஸி ஜியா முன்னதாக மனச்சோர்வு சம்பந்தப்பட்ட வரைப்படத்தை பதிவேற்றியிருந்ததால், அது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. தற்போது உலகத் தரவரிசையில் 27 ஆவது இடத்தில் உள்ள ஸி ஜியா, இம்மாதம் 15 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதி வரை நடைபெறும் ஜப்பான் பொது பூப்பந்து போட்டியில் பங்கேற்கவிருக்கிறார்.