ராஞ்சி, ஜூலை.05-
இந்தியா, ஜார்க்கண்டில் சட்ட விரோதமாகச் செயல்பட்ட நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள கர்மா என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் வேலை பார்க்கின்றனர். இந்த நிலக்கரி சுரங்கத்தில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
அங்கிருந்த தொழிலாளர்கள், கிராம மக்கள் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் படையினரும் விரைந்துச் சென்றனர். இடிபாடுகளுக்குள் இருந்து தொழிலாளர்கள் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் இடிபாடுகளில், சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்புப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலக்கரி சுரங்கம் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்தது விசாரணையில் அம்பலமானது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.