கோலாலம்பூர், ஜூலை.05-
கடந்த ஜுலை 2 ஆம் தேதி கோலாலம்பூர், பண்டார் பாரு செந்தூல், பங்சாபுரி மாவார் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் தாம் தங்கியிருந்த ஹாஸ்டலின் 6 ஆவது மாடியிலிருந்து தனியார் கல்லூரி மாணவி தவனேஸ்வரி கீழே விழுந்து மரணம் அடைந்த சம்பவம் குறித்து அரச மலேசிய போலீஸ் படை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்தக் கல்லூரி மாணவியின் மரணம் தொடர்பாக தங்களுக்குக் கிடைத்தத் தொடக்கத் தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன என்றும், இதில் குற்றத்தன்மை நிகழ்ந்து இருக்கக்கூடும் என்றும் தாங்கள் சந்தேகிப்பதாக பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் தெரிவித்தார்.
21 வயதுடைய தவனேஸ்வரின் உதட்டில் வீக்கம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக அவர் அனுப்பி வைத்த குறுந்தகவல் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சஞ்சீவன் குறிப்பிட்டார்.
தவனேஸ்வரின் இறப்பு ஒரு திடீர் மரணம் என்று கூறி, போலீசார் வெறுமனே விசாரணையின்றி கோப்பை மூடி விடக்கூடாது. மாறாக, கல்வியில் சிறந்து விளங்கி, எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கனவுக் கண்டுக் கொண்டு இருந்த ஒரு இளம் பெண்ணின் மரணத்தைக் கடுமையாகக் கருத வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தவனேஸ்வரி மரணம் குறித்து எல்லா நிலைகளிலும் போலீசார் விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் குற்றச்செயல்கள் தடுப்புக் குழுவான அரசு சாரா இயக்கத்தின் தலைவருமான சஞ்சீவன் கேட்டுக் கொண்டார்.
மாணவி தவனேஸ்வரியின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று அவரின் தந்தையைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சஞ்சீவன் இதனைத் தெரிவித்தார்.