ரியோ டி ஜெனிரோ, ஜூலை.06-
ஆசியான் உறுப்பு நாடுகள் அமெரிக்க டாலரின் பிடியிலிருந்து விடுபட்டு, உள்ளூர் நாணயப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று BRICS உச்சிநிலை மாநாட்டில் உரையாற்றிய மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இது நிதி அமைப்பை வலுப்படுத்துவதற்கும், ஒருதலைப்பட்ச ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டார்.
மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா போன்ற நாடுகள் ஏற்கனவே உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. இது தொடக்கத்தில் சிறிய அளவில் இருந்தாலும், எதிர்காலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அன்வார் தெரிவித்தார். BRICS உறுப்பு நாடுகள் தங்களுக்குள்ளான வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அனைத்து கூட்டாளர்களுடனும் பாதுகாப்பாகவும் நியாயமாகவும் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மலேசியா 2025ல் ஆசியான் தலைவராகவும், இவ்வாண்டு ஜனவரி 1 முதல் BRICS நட்பு நாடாகவும் இந்த உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.