சிரம்பான், ஜூலை.07-
சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
காலை சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு 8.01 மணிக்கு பால்குட ஊர்வலம் தொடங்கியது. பக்தி நெறிபிறழாமல் மிகுந்த கட்டுக்கோப்புடன் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தனர்.
மாலையில் நித்திய பூஜைக்கு பிறகு மேள, தாள நாதஸ்வர முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ, 5 இரதங்களை உள்ளடக்கிய பஞ்சமூர்த்திகள் இரத ஊர்வலம், மாலை 7 மணிக்கு கோவில் வாசலிருந்து தொடங்கியது.
இரதங்கள் நின்று, பக்தர்களுக்குக் காட்சியளிப்பதற்கு ஏதுவாக 5 இடங்களில் இரதப் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
தாமான் துவாங்கு ஜஃபார் ஃபாசா 3, தாமான் ஶ்ரீ செனாவாங், தாமான் துவாங்கு நஜியா யூத்/ஆர்எஸ் பிரதர்ஸ் கடை வரிசை, ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில், தாமான் துவாங்கு நஜியா மற்றும் ஆகக் கடைசியாக தாமான் துவாங்கு ஜஃபார் ஆகிய இடங்களில் பஞ்சமூர்த்திகளின் இரதங்கள் நின்று பக்தர்களுக்கு அருள்காட்சி தந்தன.
நள்ளிரவு இரத ஊர்வலம் நிறைவடைந்து, இரதங்கள் மீண்டும் திரும்பி, ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தை வந்தடைந்தன.
இந்த மஹோற்சவப் பெருவிழா, திருக்கயிலாய பரம்பரை ஶ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஶ்ரீ கார்யம் வாமதேவ ஶ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் தலைமையில் அவரின் ஆலோசனைபடி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.