இஸ்மாயில் சப்ரியின் 169 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் நடவடிக்கை

கோலாலம்பூர், ஜூலை.07-

நாட்டின் ஒன்பதாவது பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்குச் சொந்தமான 169 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

நாட்டிற்கு 14 மாதங்களே பிரதமராகப் பொறுப்பேற்ற இஸ்மாயில் சப்ரிக்கு எவ்வாறு 16 கோடியே 90 லட்சம் ரிங்கிட் ரொக்கப் பணம் கிடைத்தது என்பது குறித்து தெளிவான பதிலும், அதற்கான ஆதாரங்களும் காட்ட முடியாத நிலையில் அந்தப் பணத்தை பறிமுதல் செய்வதென எஸ்பிஆர்எம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக புத்ராஜெயா எஸ்பிஆர்எம் தலைமையகம் தொடர்ச்சியாக இஸ்மாயில் சப்ரியிடம் விசாரணை நடத்தியது. விசாரணையில் அந்தப் பணம் பெறப்பட்ட முறை குறித்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இஸ்மாயில் சப்ரிக்குச் சொந்தமான அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்வதற்கு அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோ முகமட் அனுவார் யுனுஸ் மற்றும் இஸ்மாயில் சப்ரி ஆகியோரின் பெயர்கள், வழக்கு மனுவில் பிரதிவாதிகளாக எஸ்பிஆர்எம் குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS