அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் கவிழுமானால் பிகேஆரின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும்

கோலாலம்பூர், ஜூலை.08-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் கவிழுமானால், பிகேஆர் கட்சியின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று இன்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரும், பிகேஆர் கட்சியின் தலைவருமான அன்வாரின் நம்பகத்தன்மைக்கும், ஆளுமைக்கும் சவால் விடும் வகையில் தலைமை நீதிபதி நியமன விவகாரத்தில் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி உட்பட கட்சியைச் சேர்ந்த 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து இருப்பது மிகவும் ஆபத்தான செயலாகும் என்று பாசீர் கூடாங், பிகேஆர் எம்.பி. ஹசான் அப்துல் காரிம் தெரிவித்துள்ளார்.

அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருப்பது மூலம் ரஃபிஸி ரம்லி உட்பட பிகேஆர் கட்சியின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் அன்வாரின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதையே மக்களுக்குப் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பிரதமர் என்ற முறையில் அன்வார் அதிகமான அதிகாரங்களைக் கொண்டுள்ளார். அந்த அதிகாரங்களுக்கு ஏற்ப அவர் முடிவெடுப்பதற்கு வழிவிடாமல், அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுமானால், அன்வார் தப்பிக்க முடியாத ஒரு சந்தேக நபராக வகைப்படுத்தப்பட்டு விடுவார் என்று அந்த ஒன்பது எம்.பி.க்களுக்கும் ஹசான் அப்துல் நினைவுறுத்தினார்.

அன்வார் ஒரு சந்தேக நபராக அரச விசாரணை ஆணையத்தின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்படுவார். அன்வார் அவ்வாறு விசாரிக்கப்படுவதைத்தான் ரஃபிஸி ரம்லி உட்பட அந்த 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரும்புகிறார்கள் என்பது இதன் உள்ளார்ந்த பொருளாகும் என்று ஒரு சட்ட நிபுணரான ஹசான் அப்துல் விளக்கினார்.

அப்படியொரு சூழல் ஏற்பட்டு, அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் கவிழுமானால் அதற்கான தார்மீகப் பொறுப்பையும், விளைவுகளையும் இந்த ஒன்பது பேரே ஏற்க வேண்டும் என்று ஹசான் அப்துல் எச்சரித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS