ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘அமரன்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து இருந்தார். ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இப்படம் தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி அதிக வசூல் குவித்தது.
இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இவர்களின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து இருந்தது.
இதையடுத்து தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ‘தண்டேல்’ படத்தில் நடித்த சாய் பல்லவி அதனைத் தொடர்ந்து இந்தியில் ‘ஏக் தின்’ என்ற படத்திலும் ஒப்பந்தமாகி இருந்தார். அது அவரின் முதல் பாலிவுட் படமாகும். இதில் அமீர்கானின் மகன் ஜூனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ‘ஏக் தின்’ நவம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து இந்தியில் ராமாயணா படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து சாய் பல்லவி நடித்து வருகிறார்.