ஷா ஆலாம், ஜூலை.09-
சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியச் சமுதாயத்தின் மேன்மைக்கு 2025 ஆம் ஆண்டில் 14 மில்லியன் அல்லது ஒரு கோடியே 40 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு தெரிவித்தார்.
இன்று சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த கோத்தா டாமன்சாரா உறுப்பினர் முகமட் இஸுவான் அஹ்மாட் கேள்விக்குப் பதில் அளிக்கையில் பாப்பா ராய்டு இதனைத் தெரிவித்தார்.
இந்தியச் சமுதாயத்தின் பொருளாதார மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் சிலாங்கூர் மாநில அரசு ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு திட்டங்களை வகுத்து, வெற்றிகரமாக அமல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் ஐ. சீட் ( i- SEED ) எனப்படும் சிலாங்கூர் இந்தியச் சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரிவின் வாயிலாக சொந்தமாகத் தொழில் தொடங்கும் இந்தியர்களுக்கு வர்த்தக உதவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதும் அடங்கும் என்று பாப்பா ராய்டு தெளிவுபடுத்தினார்.