பேங்காக், ஜூலை.09-
சட்ட விரோதப் பண மாற்றம் மற்றும் சூதாட்டம் தொடர்பில் மலேசியர் ஒருவர் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதுடைய அந்த மலேசியர் பேங்காக், டோன் முயேயாங் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவர் குடிநுழைவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சூதாட்ட அகப்பக்கம் தொடர்பில் அந்த நபரைக் கைது செய்வதற்கு பிடிவாரண்ட் பெறப்பட்டுள்ளதாகக் கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து அந்த நபர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டதாக டோன் முயேயாங் விமான நிலையத்தின் குடிநுழைவு மேற்பார்வை அதிகாரி அடிசாக் பன்யா தெரிவித்துள்ளார்.
அந்த நபர் கோலாலம்பூரிலிருந்து பேங்காக்கிற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.