மலேசியத் திரைப்படங்கள் 162.89 மில்லியன் ரிங்கிட் வசூல்

கோலாலம்பூர், ஜூலை.09-

இவ்வாண்டு ஜூன் 30ஆம் தேதி வரை திரையீடு கண்ட உள்ளூர் திரைப்படங்கள், மொத்தம் 162.89 மில்லியன் ரிங்கிட் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பதிவு செய்து ஊக்கமளிக்கும் செயல் திறனைக் காட்டியுள்ளன என்று தொடர்புத்துறை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளில் 2024-இல் 125.28 மில்லியன் ரிங்கிட், 2023-இல் 102.66 மில்லியன் ரிங்கிட்டை விட அதிகமாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இவ்வாண்டில் முதல் 6 மாதங்களில் திரையிடப்பட்ட 39 திரைப்படங்கள் இதில் பங்களித்ததாக தியோ நி சிங் தெரிவித்தார். அனிமேஷன் திரைப்படமான ஏஜென் அலி தெ மூவி 2 வசூலில் முக்கியத் திரைப்படமாக அமைந்துள்ளது.

திரையிடப்பட்டு கடந்த ஜூன் 30ஆம் தேதி வரை இத்திரைப்படம், 55.2 மில்லியன் ரிங்கிட்டை வசூலித்துள்ளது. ஆகவே, அதிக வசூல் செய்த உள்ளூர் அனிமேஷன் படமாக வரலாற்றை உருவாக்கியுள்ளது. இத்திரைப்படம் உள்ளூர் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது மட்டுமல்லாமல், இந்தோனேசியாவில் திரையீடு கண்ட முதல் வாரத்தில், 200,000 பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. எங்கள் திரைப்படங்கள் இப்போது அனைத்துலக தரத்துடன் ஒப்பிடும் சிறந்த வெளியீடுகளாக இருக்கின்றன என தியோ பெருமிதம் அடைந்தார்.

முன்னதாக, தலைநகரில் நடைபெற்ற 34வது மலேசிய திரைப்பட விழா பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றுகையில் தியோ இவ்வாறு கூறினார். இவ்விழா நவம்பர் 8ஆம் தேதி அங்காசாபுரி, கோட்டா மீடியாவில் உள்ள ஸ்ரீ அங்காசா அரங்கில் நடைபெறும்.

WATCH OUR LATEST NEWS