சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை: இருவர் நாளை குற்றஞ்சாட்டப்படுவர்

சிப்பாங், ஜூலை.09-

சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் அகாரா படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓர் ஆண் மற்றும் 3 பெண்களில், இக்கொலையைச் செய்ததாக நம்பப்படும் முக்கியச் சந்தேகப் பேர்வழி 20 வயது ஆணும், அவரின் காதலியும் நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.

சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாளை காலை 9.00 மணிக்கு நிறுத்தப்படவிருக்கும், அந்த ஆடவரும், அவரின் காதலியும், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படவிருகின்றனர்.

அந்த ஆடவனின் காதலி, கொலை செய்யப்பட்ட 20 வயது பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுருடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தவர் என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த ஆடவரையும், அவரின் காதலியையும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்குச் சட்டத்துறை அலுவலகம் இன்று அனுமதி வழங்கி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மனிஷாபிரிட் கவுர் கொலை தொடர்பில் ஓர் ஆண் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.

மனிஷாபிரிட் கவுருடன் தங்கியிருந்த பெண், தனது காதலனிடம் கொடுத்த வீட்டுச் சாவி மற்றும் எஸ்சஸ் கார்ட்டைப் பயன்படுத்தியே அந்த ஆடவன் இந்தக் கொலையைப் புரிந்துள்ளான் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த மாணவியின் தலையில் பலம் கொண்ட ஒரு பொருளினால் அடிக்கப்பட்டதால் தலையில் பலத்தக் காயத்துடன் அவர் உயிரிழந்ததாக சவப் பதிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஜுன் 24 ஆம் தேதி சைபர்ஜெயாவில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீட்டில் நிகழ்ந்த இந்தக் கொலையில் சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த ஒரு சீக்கியப் பெண்ணான மனிஷாபிரிட் கவுர் கொலை செய்யப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS