சிப்பாங், ஜூலை.10-
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் அகாரா கொலை வழக்கு விசாரணையை விரைவில் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யும்படி, சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விண்ணப்பிக்கப்பட்டது.
இந்தக் கொலை வழக்கு குற்றவியல் சட்டம், 302 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்கு விசாரணை, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு விரைவில் மாற்றம் செய்யும்படி இக்கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரதான சந்தேகப் பேர்வழியான 19 வயது எம். ஸ்ரீ தர்வீன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில் வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை பிராசிகியூஷன் தரப்பு விரைந்து ஒப்படைக்குமாறு மனோகரன் வலியுறுத்தினார். ஆவணங்களை ஒப்படைப்பதில் காலம் தாமதம் காட்டப்பட்டு, வழக்கு தொடர்ந்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலேயே கிடப்பில் இருக்குமானால், தம்முடைய கட்சிக்காரரான ஸ்ரீ தர்வீன், நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்.
எனவே இவ்வழக்கை உயர் நீதிமன்றத்தில் விரைந்து மாற்றம் செய்வது மூலம் வழக்கிற்கான ஏற்புடையத் தற்காப்பு நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ள முடியும் என்று மனோகரன் வலியுறுத்தினார்.
மாணவி மனிஷா கொலை செய்யப்படுவதற்கு தனது காதலன் தர்வீனுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 19 வயது டி. தினேஸ்வரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமட் பஹாருடின் முகமட் அரிஃப் இந்தக் கொலை வழக்கு வைரலாகி வருவதால், இதற்குத் தீர்வு காண வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு விரைந்து மாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
எனினும் வழக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்களான சவப் பரிசோதனை அறிக்கை, இரசாயன அறிக்கை முதலியவற்றுக்காகத் தாங்கள் காத்திருக்க வேண்டி இருப்பதால் வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்குத் தங்களுக்கு சற்று கால அவகாசம் தேவை என்று பிராசிகியூஷன் தரப்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ராஜா ஸைஸுல் ஃபரிடா ராஜா ஸஹாருடின், நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கைராதுல் அனிமா ஜெலானி தெரிவித்தார்.
கடந்த ஜுன் 23 ஆம் தேதி இரவு 9.11 மணியில் சைபர்ஜெயாவில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீட்டில் சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த ஒரு சீக்கியப் பெண்ணான 20 வயது மனிஷாபிரிட் கவுர் என்பவரைக் கொலை செய்ததாக தர்வீன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் கொலைக்குத் தனது காதலன் தர்வீனுக்கு உடந்தையாக இருந்ததாக தினேஸ்வரி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இருவரும் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.