ஜோகூர் பாரு, ஜூலை.10-
அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, ஜோகூர், கெலாங் பாத்தா, சுங்கை பூலாய் அருகில் இன்று விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஐவரும் உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் படையின் ஏஎஸ்355என் வகையைச் சேர்ந்த அந்த ஹெலிகாப்டர், கேப்டன் உட்பட ஐவருடன் ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள தஞ்சோங் கூப்பாங்கிலிருந்து காலை 9.51 மணிக்கு புறப்பட்டது.
காலை 10.25 மணியளவில் மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவின் படகுத் துறையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் தெரிவித்தார்.
பலமுனை அணுசக்தி பாதுகாப்புக் கண்காணிப்புப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது.
கடற்பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் அந்த ஐவரையும் கடல் சார் ரோந்துப் போலீசார் காப்பாற்றியுள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்காக அந்த ஐவரும் ஜோகூர் பாரு, சுல்தானா அமீனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களில் இருவரும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியிருக்கின்றனர். அவர்கள் சற்று ஆபத்தான நிலைமையில் இருப்பதாக ஐஜிபி தெரிவித்தார்.
இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள விமான விபத்து விசாரணைப் பிரிவு, தனது விசாரணையை முடுக்கி விடும் என்று பொது வான் போக்குவரத்து இலாகா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.