கோலாலம்பூர், ஜூலை.10-
நாட்டின் நீதித்துறையின் உச்சப் பீடமாகத் திகழும் உயர் நீதிபதிகள் நியமன விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று இஸ்தான நெகாரா இன்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் தலைமை நீதிபதி நியமன விவகாரத்தில் தலையீடு இருப்பதாகக் கூறி, அது குறித்து விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்தானா நெகாரா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் அரண்மனை கேட்டுக் கொண்டுள்ளது.
நீதிபதிகள் விவகாரம் என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய விவகாரமாகும். இதில் அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்டு இருப்பதால், அதற்கு ஏற்ப இவ்விவகாரத்தை மிகக் கவனமாகவும், நேர்மையாகவும் கையாள வேண்டியுள்ளது என்று இஸ்தானா நெகாரா வலியுறுத்தியுள்ளது.