கோலாலம்பூரில் விபச்சார விடுதியில் இருந்து 14 வெளிநாட்டு பெண்கள் மீட்பு

கோலாலம்பூர், ஜூலை.11-

கோலாலம்பூர் ஜாலான் பெட்டாலிங்கில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் நடைபெற்ற சோதனையில், பாலியல் சுரண்டலுக்குப் பலியாகியதாக நம்பப்படும் 14 வெளிநாட்டுப் பெண்கள் நேற்று குடிநுழைவுத் துறையினரால் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட பெண்கள் 18 முதல் 36 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். இதில் 10 வங்காளதேசிகள், 3 இந்திய நாட்டவர்கள், ஒரு இந்தோனேசியர் ஆகியோர் அடங்குவர்.

சோதனை நடவடிக்கை பிற்பகல் 1.15 மணிக்கு உளவுத் துறையின் தகவலின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாக, கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகமது சௌபி வான் யூசோஃப் தெரிவித்தார்.

சில பெண்கள், தங்களைக் காதலர்கள் ‘விற்று விட்டனர்’ என்று தெரிவித்துள்ளதாகவும், சோதனைக்கு இடையில் பல வாடிக்கையாளர்கள் தப்பி ஓட முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட வளாகம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கியதாகவும், சோதனையின் போது நேப்பாளம், வங்காளதேசம், மியான்மாரைச் சேர்ந்த 16 ஆண்கள் வாடிக்கையாளர்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் சுமார் 60 ரிங்கிட் கட்டணம் செலுத்தி பெண்களின் சேவையைப் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.

மூன்று உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டு, 2007 ஆம் ஆண்டு மனிதக் கடத்தல், புலம் பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 12ன் கீழ் விசாரணை தொடரப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS