பிகேஆர் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் அம்பாங் எம்.பி. யுமான சுரைடா கமாருடீன், 14 ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது, கட்சியின் பலமே தவிர அவரின் சொந்த பலம் அல்ல என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சைப்புடீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சியில் வெற்றிபெற்ற பின்னர், கட்சி விட்டு கட்சி தாவியுள்ள சுரைடாவிற்கு எதிராக, ஒரு கோடி வெள்ளி இழப்பீடு கேட்டு பிகேஆர் கட்சி தொடுத்துள்ள வழக்கில் சைப்புடீன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுரைடா, வெற்றிபெற்ற அம்பாங் நாடாளுமன்ற தொகுதியில் அவருக்கென்று சொந்த வாக்காளர்கள் இல்லை. மாறாக, பிகேஆர் கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் 14 ஆவது பொதுத் தேர்தலில் அவரை வெற்றிபெற செய்துள்ளனர் என்று தமது வழக்கு மனுவில் சைப்புடீன் குறிப்பிட்டுள்ளார்.