ஜோகூர் பாருவில் பஃபர் மீன் என்ற ஊது மீனை உண்டு, மூதாட்டி ஒருவர் மரணம் அடைந்த வேளையில் அவரின் கணவர் கடுமையான பாதிப்புக்கு ஆளான சம்பவம் தொடர்பில் கொடிய நச்சுத்தன்மையைக் கொண்ட அவ்வகை மீனை மக்கள் உண்ணக்கூடாது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
ஊது மீனை மக்கள் உண்பதற்கு 1972 ஆம் ஆண்டு மலேசிய மீன் வளத்துறைச் சட்டத்தின் கீழ் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை 1983 ஆம் ஆண்டு முதல் அமலில் இருப்பதாக டாக்டர் நூர் குறிப்பிட்டார்.
கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மார்ச் 18 ஆம் தேதி வரையில் ஊது மீன் உண்டதன் காரணமாக 58 விஷ உணவு சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், இவற்றில் 18 பேர் உயிரிழந்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஊது மீன் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு வகை ரசாயன திரவியம் ஆஸ்துமா வியாதியைக் குணமாக்கும் என்று நம்பி அந்தத் தம்பதியர் ஊது மீனை சமைத்து உண்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இவ்வகை மீன்கள் கிருமிகளை உணவாக உட்கொள்வதால் அவற்றின் உடலில் உயிர்கொல்லி தன்மையிலான நச்சுத்தன்மை நிறைந்திருக்கும். இது உண்பதற்குரிய மீன் அல்ல என்று டாக்டர் நூர் தெளிவுபடுத்தினார்.