பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 இளம் வயதினர் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.
அலோர் காஜா மாஜிஸ்ட்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான, 14 முதல் 17 வயதுடைய அந்த நான்கு இளவயதினரும், நீதிபதி தியோ ஷூ யீ முன்னிலையில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் இன்னும் பள்ளியில் படித்து வரும் மாணவராக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த மே 4-ஆம் தேதி, அதிகாலை சுமார் 12.30 மணியளவில், கோலா சுங்கை பாரு காட்டுப்பகுதி அருகே, 42 வயதான லிம் லிஹ் யின் என்ற பெண் ஓட்டுநரை, இரும்புக் கம்பியால் தாக்கி, கழுத்தை நெரித்ததாக அவர்கள் நால்வர் மீதும் கூட்டாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றவியல் சட்டம் பிரிவு 324-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது பிரம்படிகளோ விதிக்கப்படலாம்.
நீதிபதி தியோ ஷூ யீ , அவர்கள் நால்வருக்கும் தலா 1,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கியதுடன், வழக்கின் அடுத்த விசாரணை மற்றும் நடத்தை அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்காக ஜூன் 24-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளார்.
இதன் காரணமாக நேற்று அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








