தென்கொரியாவின் ஜேஜூ தீவில் உள்ள சன்பங்சன் மலையின் பாதுகாக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து வழிதவறிய 60 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நிலச்சரிவைத் தடுக்கவும் இயற்கையைப் பாதுகாக்கவும் 2031-ஆம் ஆண்டு வரை பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அந்த மலைப்பகுதிக்குள், அவர் தவறுதலாக நுழைந்து பின்னர் இறங்கும்போது வழிதெரியாமல் செங்குத்தான பாறைக்கு அருகில் சிக்கிக்கொண்டார். உள்ளூர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியாத நிலையில், தான் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளருக்கு அவர் மின்னஞ்சல் மூலம் அவசர உதவி கோரியதைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இரவு 10 மணியளவில் அவரை மீட்டனர்.
தற்போது அந்த ஆடவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், கலாசாரப் பாரம்பரிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவர் மீது தென்கொரிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இக்குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது கிட்டத்தட்ட 17,000 சிங்கப்பூர் டாலர் 20 மில்லியன் வோன் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.








