அதிகாரிகளின் இலக்காக இருந்தவர் சூசை மாணிக்கம்

கோலாலம்பூர், மே 15 –

பயிற்சியின் போது இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அரச மலேசிய கடற்படை பயிற்சி வீரர் ஜே. சூசைமாணிக்கம், அதிகாரிகளால் “குறி” வைக்கப்பட்ட பயிற்சி வீரர் ஆவார் என்று முன்னாள் பயிற்சி வீரர் ஒருவர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

பேரா, லுமூட், கேடி சுல்தான் இட்ரிஸ் கடற்படை தளத்தின் பயிற்சி வீரரான சூசை மாணிக்கத்தை அதிகாரிகள் ஓரங்கட்டியதுடன், அவர் பயிற்சியில் ஈடுபடும் போது முறையான சாதன வசதிகளை வழங்காமல் அவரை அலைகழிக்க வைத்தனர் என்று தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் தர பொறியியலாளராக பணியாற்றி வரும் 31 வயது அப்துல் முயிஸ் ரம்லி தெரிவித்தார்.

கடமையில் உள்ள பயிற்றுநர்களும் சூசை மாணிக்கத்தை ஓரங்கட்டிய செயலை பார்க்கும் போது, அந்த பயிற்சி வீரர் அதிகாரிகளால் குறிவைக்கப்பட்டு விட்டார் என்பது தம்மால் உணர முடிந்தது என்று சூசை மாணிக்கம் மரணம் தொடர்பில் நடைபெற்று வரும் வழக்கில் அந்த முன்னாள் பயிற்சி வீரர் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார்.

தனது மகன் சூசை மாணிக்கம் மரணம் தொடர்பில் அரச மலேசிய கடற்படை, அதன் தளபதி, தற்காப்பு அமைச்சு மற்றும் மலேசிய அரசாங்கம் உட்பட 11 தரப்பினருக்கு எதிராக தந்தை S. ஜோசப் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

ஒரு பட்டதாரியான சூசை மாணிக்கம், கடந்த 2018 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி லுமூட்டில் உள்ள இராணுவ மருத்துவமனையில் இறந்ததாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக இழப்பீடு கோரி தந்தை ஜோசப் இவ்வழக்கை தொடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்