அன்வாரை விமர்சிக்கும் தகுதி முஹ்யிட்டினுக்கு இல்லை!

கோலாலம்பூர், ஏப்ரல் 22-

முன்னாள் பிரதமர் டத்தூஸ்ரீ நஜிப் ரசாக்கை வீட்டு சிறையில் வைப்பதற்கு, முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவை வழங்கியதாக கூறப்படும் விவகாரத்தில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை விமர்சிப்பதற்கு பேரிக்காதான் நசியனால் தலைவர் டான் ஸ்ரீ முஹ்யிட்டின் யாசினுக்கு துளியும் தகுதியில்லை என ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் பாஹ்மி பட்சில் பதிலடியை வழங்கியுள்ளார்.

முதலில், முஹ்யிட்டின் யாசின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு பயந்து, வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடியுள்ள அவரது மருமகனான அட்லான் பெர்ஹானை, நாட்டிற்குள் திரும்ப அழைத்துவர வேண்டும். அதுவரையில், பிரதமரை விமர்சிப்பதற்கான எவ்வித தகுதியும் அவருக்கு கிடையாது என தொடர்பு அமைச்சருமான பாஹ்மி பட்சில் கூறினார்.

அதிக மதிப்புடைய குடிநுழைவு தொடர்பான குத்தகை அட்லானுக்கு வழங்கப்பட்டதில், அதிகார முறைகேடு நிகழ்ந்திருக்கலாம் எனும் சாத்தியத்தின் அடிப்படையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்தாண்டு அவருக்கு எதிராக விசாரணையை தொடங்கியது. அதன் பிறகு, வெளிநாட்டிற்கு சென்றிருந்த அட்லான், இதுவரையில் நாடு திரும்பவில்லை.

அட்லான் மீது குற்றச்சாட்டை சுமத்த தங்களின் தரப்பு தயாராக உள்ள நிலையில், அவர் எங்கு இருக்கின்றார் என்பதை தங்களால் கண்டறிய முடியவில்லை என அவ்வாணையம் இவ்வாண்டு பிப்ரவரி வாக்கில் கூறியிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்